Sunday, February 6, 2011

மூன்றாவது கோணம்

படித்ததில் பிடித்தது


மூன்றாவது கோணம் 


சத்குருவிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது நகைச்சுவையும் பகுத்தறிந்து விளக்கும் எளிமையான நடையும். அவை எல்லாமே இந்த புத்தகத்தில் நிறைய கிடைகிறது. இந்த புத்தகத்தை எடுத்து ஒரே மூச்சில் நான் படித்து முடித்தேன் -- ஒரு துப்பறியும் கதையை படிப்பது போல். 
அவ்வளவு சுவாரசியம்...
உதாரணத்திற்கு  சில...........


1. பூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லை...

.நகரங்கள் உருவாகாத பழைய தினங்களில், காட்டுப்பாதையில் மக்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் மாட்டு வண்டி மூலமாகவும் நடந்தும் தங்கள் பயணத்தை அவர்கள் மேற்கொண்டார்கள். ' புலி போன்ற பூனை இன மிருகம் குறுக்கில் கடந்தால், அது புதரில் பதுங்கி இருக்கலாம். உங்களையோ உங்கள் வாகனத்தை இழுக்கும் மிருகங்களையோ குறி வைத்து அது பாயக்கூடும். சற்று நேரம் பொறுத்து பயணத்தை தொடர்வது நல்லது' என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். 

இன்றைய தினத்தில் இது அபத்தமான நம்பிக்கை. 

மோட்டார் வாகனங்கள் விரையும் நகரத்தில், பூனை குறுக்கே போனால் அதற்குத்தான் சகுனம் சரியில்லை; ஏதாவது வண்டியில் அடி பட்டு சாகும். 

2. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்..

மிகக் கொடூரமான நம்பிக்கை .


பொருளாதாரம் எப்போதும் சில தந்திரங்களை கையாளும். 
குடும்ப வருமானத்துக்கு விவசாயத்தை மட்டும் நம்பியிருந்த காலத்தில், ஆண் குழந்தைகள் வளர்ந்து, உழவுக்கு கை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பு தந்தைகளுக்கு பாரமாக இருந்தது. 


இன்றைய உலகில் அப்படி எந்த அவசியமும் இல்லாமல் போய் விட்டது. சொல்லப்போனால் படிப்பிலும், பொறுப்பிலும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட பல விதத்தில் முன்னணியில் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. 


ஐந்து புத்திசாலியான மகள்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கையை ஆனந்த மயமாக்கி விடுவார்கள்.  


மாறாக ஐந்து ஒற்றுமைஅற்ற மகன்களுக்கு நீங்கள் தந்தையாக இருந்து விட்டால் அவர்கள் குடும்பத்தையே நாசமாக்கி விடக்கூடும். 


உண்மையில் ஐந்து பெண்களைப் பெற்றால், ஆண்டியும் அரசனாவான் என்பதே என் கருத்து.






1 comment: